Wednesday, February 15, 2012

காதலை அறிவீர்!

காதலோ காதல்என்று
கடைவிரித் திந்த நாளில்   
ஓதுவா ரெல்லாம்;இங்கு
உண்மையை அறிந்து; பண்புக்
காதலைச் சொல்வ தில்லை;
களங்கமும் உணர்வ தில்லை:
ஆதலால் அவர்கள் இங்கு
அறியவே எழுதுகின்றேன்!

ஆதிநாள் அவ்வை சொன்ன
அதன் பொருள்;இருபாலர்கள்
காதலில் ஒன்று பட்டு
காண்பதே இன்பம் ஆகும்!
காதலின் களவை,கற்பை
காமத்துப் பாலில் அய்யன்
ஓதிய பண்பை  இந்த
உலகிடை யாரே சொல்வர்?

சீதையைத் தமிழில் காட்டிச்
செதுக்கிய கம்பன் சொன்ன
காதலின் நுட்பம் எல்லாம்
காண்பதே தமிழ்ப் பண்பாடு!
மீதியை இளங்கோ,சாத்தன்
மென்மையாய் வடித்து இந்த
மேதினி தன்னில் காதல்
மேன்மையைச் சொன்னா ரன்றோ?
  
காதலைக் குயில் பாட்டென்றும்
கண்ணம்மா மீதில் என்றும்
ஓதினான் பாரதி;பின்னர்
உயர்தனி எளிய நடையில்
போதையில் புலமை மிஞ்சப்
புகழ்ந்தவன் கண்ண தாசன்!
காதலை இவர்கள் வழியே
காண்கிலார் மூடர் என்பேன்!
  
பருவத்தில் வீழ்ந்து நட்புப்
பழகுவோர் காதல் எல்லாம்
அருகுபோல் கருகிப் போகும்;
அதன் வழி அன்பு சாகும்!
உருவமும் கெட்டு உண்மை
உள்ளமும் பட்டு,பகைமை
பெருகிடும் பாதை ஒன்றே
பெருந்துயர் சேர்வ தாகும்!


ஒருவருக் கொருவர்;உள்ளம்
உருகிய வாறு பழகி;
பெரியவர்;பெற்றொர் ஏற்கப்
பிழையிலா நட்புக் கொண்டு
இருவுடல் ஓருயிர் ஆகி
இல்லறம் காணும்;வாழ்வைத்
தருவதே காதல் என்று
தமிழரின் பண்பு சொல்லும்!

அஞ்சிலே அரும்பும் காதல்;
அன்னையின் மேன்மை கூறும்;
பிஞ்சிலே பழுக்கும் காதல்;
பிழைபட வைக்கும்;உண்மை!;
நெஞ்சிலே அரும்பித் தூய
நினைவிலே விளையும் காதல்
எஞ்சிடும் வாழ்நாள் வரைக்கும்
எச்சமாய் நின்று வாழும்

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.2.2012

No comments:

Post a Comment