Tuesday, February 21, 2012

ஊடலின்பம்!


அருமை நண்பர்களே,
கவிதை இலக்கிய ஆர்வலர்களே,
காதற்சுவை ததும்பும் கவிதைகளைப் படைப்பதில் அளப்பறிய ஆர்வம் கொண்ட கவிஞர்களே,

வணக்கம்.

முகநூலில் தொடர்ந்து எனது பதிவுகளைப் படித்து வரும் எனது நண்பர்கள் பலரும் அறிந்திருக்கும் உண்மை,  ‘நான் காதல்,சினிமா,காமெடி என்ற வகையிலான கருத்துக்களை எழுதுவதிலோ அவை பற்றிய விமர்சனங்களில் பங்கு பெறுவதிலோ ஆர்வம் காட்டாதவன்; அவற்றைக் கடுமையாக விமர்சிப்பவன்என்பது.

சில நண்பர்களுக்கு இதில் சற்று விசனம்கூட வந்ததுண்டு, இன்னும் சிலர்  ‘ஏன் ஸார்,உங்களுக்கு காதல் என்றாலே பிடிக்காதோ? என்று கூட எனக்கு எழுதியிருக்கிறார்கள்.

நானே கூட
  “காமெடி,சினிமா,காதல் பித்து,
  கவிதை எனும் பெயரில்
  யாம்இன்புற்று எழுதுவ தில்லை;
  என்னை மன் னிப்பீர்!

என்று,இதே முக நூலில் எழுதி இருக்கின்றேன்.ஆம்.நான் இங்கு  ‘காதல் கவிதைகள்என்னும் பெயரில்குப்பை கொட்டுவதைஎதிர்ப்பவன்;விரும்பாதவன்தான்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா

எனக்கும் காதல் உண்டு;அது இலக்கியம் தழுவிய எண்ணங்களில் மூழ்கி இன்புற்று மகிழ்ந்த காதல்; பண்பினாலும் அறிவார்ந்த அன்பினாலும் அந்தக் காதலுக்கு சமாதி கட்டிய ஷாஜகான் நான்.

அந்தக் காதலுக்கு நான் சமாதி கட்டியதன் மூலம் அதன் நினைவுகள் அமரத் தன்மை பெற்றிருப்பதாய்ப் பெருமை கொண்டு,இதோ, எனது ஊரின் அமராவதி நதியின் நினைவுகளில் மூழ்கி, உங்களுக்குக் காதல் இலக்கியக் கவிதை ஒன்றை யாத்திருக்கின்றேன்.

தலைவன் தலைவி;நாயக-நாயகி ஊடலின் முடிவில் கூடி முயங்கும் காதல் இன்பத்தின் நுகர்ச்சியை வெளிப்படுத்தும் கவிதை இது.

வள்ளுவன் வடித்த காமத்துப்பாலின்ஊடல்உவகை' அதிகாரத்தின்
இறுதிக் குறளின் இலக்கண விளக்கம்போன்ற இந்தக் கவிதையில் இன்புறுங்கள்.நன்றி.
அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
24.12.2011

---------------------------------------------------------

ஊடுதல் காமத்திற்கின்பம்!
---------------------------------------------------------


                    
                            
















அன்றொரு நாள் மார்கழியின்
       அழகான பவுர்ணமி நாள்;
நின்றிருந் தேன்அமர நதி
        நீள்கரையின் வயலோரம்;
கன்றிளமை வயதோடும்
       காதலியின் நினைவோடும்
மென்றுவரும் நினைவலைகள்
       மேவி வரக் காணுகின்றேன்:

வானமெனும் வீதியதில்
       வட்டமிடும் வெண்ணிலவு;
மோன நிலை நானடைந்து   
       மூழ்கி,அதில் எனை மறந்தேன்;
பூனையென நடந்து வந்து;
       பூ விழியாள் தீண்டிவிட்டு,
ஏனென்று கேட்டதுபோல்
       இடம் பெயர்ந்து நின்றிருந்தாள்!

’’ஆகா,என் ஆருயிரே
      ஆனந்தத் தேனமுதே;
வாகான வளர் கவிதை
      வழங்குகின்ற அட்சயமே!
ஏகாந்த வேளையிதில்
      ஏன் விலகி நிற்கின்றாய்?
நோகாமல் நோக வைக்க
      நோக்காமல் நிற் குதியோ?”

என்றவளை ஏறெடுத் தேன்:
      இரக்கமின்றி அவளு ரைத்தாள்:
இன்றுநான் வரும் போது 
      என் நினப்பு இல்லாமல் 
நன்றென்று வெண்ணிலவில்
      நாட்டம்தான் கொண்டிருந்தீர்?
பின்னெதற்கு நா னிங்கு?
      பேசாமல் போ கின்றேன்!”

அய்யய் யோ,கண்மணியே,
       அநியா யம்உன் கோபம்
பொய் யன்று என் காதல்;
      புரியாதோ என் மனது?
மெய்யாகச் சொல் கின்றேன்
      மேகத்தில் உன் முகந்தான்
கொய்து வைத்த நிலவாக
      கொள்ளை யிடக் கண்டேண்டி’”

உன்னழகை எண் ணித்தான்
      உள்ளம் பறி கொடுத் திருந்தேன்;
என்றென் றும்எப் போதும்
      எங்கே யும் உன் நினைவில்
பின்னு கின்ற உவமைகளில்
      பேசுவதில் உருகும் நீ
என்கவி தைப் பாடுபொருள்;
       இலக்கணமும் நீதானே!

முந்நாளில் நாம் இருவர்
      மோகத்தில் திளைத்திருந்த
அந்நாளை மறந்தனையோ?
      அப்போதும் இந் நிலவே
ஆகாயச் சாட்சியன்றோ?
       இப்போது மட்டும் அதை
எதிரியெனக் காண்குவையோ?
       முந்தாமல் முந்தி எனை
மூழ்க வைத்த கூடலில்நீ--

முத்து நகையாடியதும்                                  
       மோகமொழி வேகமதில் 
தத்தை என மாறியதும்
       தஞ்சமெனத் தாவி எனைக்
கொத்தி விளை யாடியதும் 
       கொவ்வை இதழ் ஓரமதில்
வித்தை பல காட்டி யதும் 
    வெண் ணிலவின் சாட்சியடி!

இவ்வாறு எடுத் துரைக்க
     இடைதளர்ந்து எனைநோக்கி;
கவ்வா மல்கவ்வு கின்றாள்;
      காதலன் நான் மெய்யளக்க;
தவ்வா மல்தவ்வு கின்றாள்;
      தையல் அவள் மைய லுற
செவ்வாயில் முத்துரைத் தேன்;
      சேயிழை யோசொத் திழந்தாள்!

          -கிருஷ்ணன்பாலா-
                  24.12.2011
--------------------------------------------------------------------------------------------
ஊடுதல் காமத்திற் கின்பம்; அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
 (திருக்குறள்: காமத்துப் பால்:அதிகாரம்:ஊடல் உவகை - குறள்:1330)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Friday, February 17, 2012

உள்ளத்தில் உள்ளது கவிதை!


நேர்மையோ டிருத்தல்;நாளும்
நேர்வழி  நடத்தல்;புத்திக்
கூர்மையோ டுழைத்தல்; எங்கும்
பொய்மையை எதிர்த்து நிற்றல்

இவை என்றன் கொள்கையாக
இறை எனைப் படைத்த தாலே;
அவை என்றன் கவிதை  என்று
அளிக்கின்றேன்;உணர்வ தாரோ?

     இவண்-
     கிருஷ்ணன்பாலா
          17.2.2012

Wednesday, February 15, 2012

எரிவது,நெஞ்சில் நெருப்பு!


கல்லும் மண்ணும் தோன்றா முனமே,
கனிந்தது நம்மொழி;உண்மை!
அல்லும் பகலும் இதையே சொல்லி
அளப்பதிலே ,என்ன நன்மை?

முன்னம் யாவும் முன்னிலை வகிக்க,
மூத்த குடிஎனத் திகழ்ந்தோம்;
பின்னர்அவற்றைப் பெருமை பேசியே
பேணும் சாதனை மறந்தோம்!

உள்ளுணர்வோடு உலகத் தமிழரின்
ஒற்றுமை வேண்டித் துடிப்போம்;
உள்ளூர்த் தமிழர் மட்டும் இங்கே
ஒருவருக் கொருவர் கெடுப்போம்!


செய்யும் தொழிலே தெய்வம்என்றொரு
சிந்தனை தனையும் அறி வோம்;
உய்யும் வழியை மறந்தவர் ஆகி,
உருப் படாமலேதிரி வோம்!

எப்படி இருந்தோம்எப்படி வாழ்ந்தோம்?'
என்கிற பெருமை யைஇன்று,
செப்படி வித்தை அரசியற் குழியில்
சேர்த்து விட்டோமே,கொன்று!

திறமையும் தெளிவும் கொண்டோர் நமது
தேசத்தை விட்டே ஓடுகின்றார்;
அறிவும் புகழும் செல்வமும்தேடி
அந்நிய நாட்டில் வாடுகின்றார்!

கூராய் எதையும் ஆரா யாமல்
கூட்டம் கூட்டமாய்ப் போனோம்;
யாரோ ஒருவன் பின்னால் செல்லும்
ஆட்டு மந்தைநாம் ஆனோம்!

அரியா சனங்களின் கீழே நம்மை
அடிமைகள் ஆக்கிக் கொண்டோம்;
'தெரியா சனங்கள் நாம்'எனநமக்கே,'
திலகம்தீட்டிடு கின்றோம்!

பொய்யும் புரட்டும் புண்மொழிப் பேச்சும்
பூத்திடும் மேடைகள் முன்னே;
கையொலி செய்தே மெய்ம் மறப்பதில்நாம்,
கலங் காதிருப்பதுஎன்னே?

தலைவனின் பின்னேதறுதலை'போலத்
தாழ்ந்துவிட் டோமேஇன்று!
உலகினில் இந்த அவலத்தை மாற்றி
உயரும் நிலைதான்,என்று?

இன்றைய நிலையை எண்ணிப் பார்த்தால்,
எரிவது நெஞ்சில் நெருப்பு;
என்னது,நமக்கு,இப்படிக் கேடு?'
என்பதுதான் கை இருப்பு!

தமிழா, தமிழா தலைநிமிர் வாயா?
தவறுகள் களைந் திடுவாயா?
நமைத் தாழ்த்திடும்இக் கொடுமைகள் சாக
நல்லறி வுணர்ந் திடுவாயா?

-கிருஷ்ணன்பாலா
15.12.2010

தாய்!

மனிதரின் வாழ்வில் இரண்டு அடிப்படைக் காரணிகள்;

ஒன்று தந்தை;இன்னொன்று தாய்.

ஆணும் பெண்ணும் இன்றி இந்த உலகம் படைக்கப் படவில்லை;
இதில் பாதி மகளிர் என்னும் பெண் இனத்தின் உரிமை. அந்தப் பெண் இனத்தின் பெரு மதிப்பாய்த் திகழ்பவள் தாய், இது மகளிர் தினம் என்று வருடத்தின் ஒரு நாளைத் தீர்மானித்துக் கொண்டு சிறப்பிப்பது இயந்திரத் தனம்.

நாம் ஒவ்வொரு நாளும் நினைவகலாமல் தாயைப் போற்றி மதிப்போம்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல;மிருகங்களுக்கும் பிற உயிர்களுக்கும் தாய்தான்.

என்னை பொறுத்தவரை –
நமது பண்பாட்டின் வித்தே தாயிடமிருந்து அன்பையும் தந்தையிடமிருந்து அறிவையும்தான் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் உடல் ரீதியிலும் உணர்வு ரீதியிலும் பெற்று வளர்கின்றன என்பதுதான்.

அன்பு இருந்தால் அடங்கி வாழலாம் அறிவு இருந்தால் அடக்கி வாழலாம்;

அதனால்தான் பெண்கள் இயற்கையிலேயே அடக்கம் நிறைந்த பண்புகளுடன் இருப்பதை நமது பண்பாடு விளக்குகிறது.

இதில் விதி விலக்குகளாக இருப்பவர்களைப் பற்றி நாம் விசனம் கொள்ளாது,உண்மையிலேயே தமிழ்ப் பண்பாடு செழித்த பெண்மையை  நாம் நம் தாயின் வடிவில் போற்றுவோம்.
எனது தாய்க்கு நான் படைத்த கவிதை இங்கு உங்கள் எல்லோருக்குமாக:

இவண்-
கிருஷ்ணன்பாலா
8.3.2012

தாய்

 
தாய்’ என்றெண்ணித் தினம் நான் மகிழத்
தகுந்தவள்’ என் தாய்நீயே
ஓய்வும் துயிலும் துறந்தாய்;நாளும்
உன்மகன் பொருட்டே உழைத்தாய்!

பத்தாய் மாதம் சுமந்தாய்; என்னைப்
படைத்தாய் இந்தப் பாரில்;
சொத்தாய் பிள்ளைப் பித்தாய்;அன்பு
சொரிந்தாய்; சொந்தம் புரிந்தாய்!

குழந்தாய்என்றெனைக் குழைந்தாய்; முத்தம்
கொடுத்தே சித்தம் குளிர்ந்தாய்!;
இழந்தாய் உன்றன் சுகம் அத்தனையும்
என்விழி துயில விழித்தாய்!

பாய் என்னுடலை வதை செயும்என்றே
பஞ்சாய் மேனி அளித்தாய்;ஒரு
நோய் என்மீது வந்தால்; நீயோ
நூலாய்  மேனி இளைத்தாய்!

முத்தாய் முல்லைக் கொத்தாய் என்னை
மொழிந்தாய்;உவமை பொழிந்தாய்:
இத்தாய்க் கிணை இங்கெத்தாய்?என்று
எவரும் எள்ள, நிறைந்தாய்!

எழுதாய் மகனேஎன விழைந்தாய்;என்
எழுத்தினைக் கண்டே மகிழ்ந்தாய்;
பழுதாய் நானோர் பிழை செய்தாலோ
பதைத்திட உள்ளம் அழுதாய்!

தொழுதாய் தெய்வம்;என்பொருட் டே,நீ
தொண்டுகள் செய்து நெகிழ்ந்தாய்;
விழுதாய் நெஞ்சில் படர்ந்தாய்;என்னுள்
வேர்போல் ஊன்றி விளைந்தாய்!


’அப்பா;என்றே அழைத்தாய் ;என்னை
அணைத்தே அமுது கொடுத்தாய்:
முப்பால்;வெல்லும்;அப்பால்;அந்த
அமுதம் உந்தன் முலைப்பால்!

ஒருநாளேனும் உன்பசியை  நீ
உரைத்தாய் இல்லை;பொறுத்தாயே!
ஒருநாளேனும் உண்ணாமல்;நான்
உறங்கும் நிலையைத் தடுத்தாயே!

எனதாய் எதையும் அடைந்தாய் இல்லை!
எனினும் எனையே  கனிந்தாய்;
உனதாய் ஒன்றே சொந்தம் என்று
உலகில் எனையே  நினைந்தாய்!

பெண் எனவந்த பேய்கூட; உன்
பெருங் குணத்தால்தான் வாழ்ந்ததென
புண்குணம் கொண்டோர் அறியாமல்
போய் மறைந் தாயே,என் தாயே!

மரணம்வரையிலும் எனை நினைத்தாய்;
மண்ணில் விதையாய்ப் புதைந்தாயே!
கருணையின் மறுஉரு உனை,எங்கு
காண்பேன்? அம்மா, பிரிந் தாயே!

கண்ணில் ஒளியைக் காணாமல்;நான்
கருத்தில் வைத்தே தொழுகின்றேன்;
மண்ணில் நான்உன் மகவாய்;நாளும்
மனதால் எண்ணி அழுகின்றேன்!

என்னை விட்டு,ஏன்அகன்றாய்நீ
என்றே நாளும் கனக்கின்றேன்:
உன்னை மீண்டும் பெற்றே;இந்த
உலகில் பிறந்திடத் துடிக்கின்றேன்

என்னைச் சுமந்து பெண் வடிவில்
இருந்தாய் எனது முன் வாழ்வில்;
என்னை விட்டு மறைந்தாலும்
இன்னும் சுமக்கும் புவி நீதான்!

என்னைச் சுமந்தாய்;உனை நாளும்
இதயம் வைத்துச் சுமக்கின்றேன்;
உன்னைக் கருத்தில் சமைக்கின்றேன்;
உலகில் அதைத்தான் படைக்கின்றேன்!

இப்படிக்கு,
அழுது தொழும் உன் மகவு