Sunday, March 25, 2012

அடடா,அந்த நிலை!.....








சிந்தனலயத்தில் சிக்கிய நிலையில்
சிலிர்த் தெழுகின்றது என்மனது:
எந்தநிலையினில்இருந்தது என்பதை
எண்ணிப் ர்த்ததைச்சொல்கின்றேன்:

புகைப்படம் போல முகப்படம் ஆகிப்
புதிதாய்ப் பதிக்கும் கவிதை;நல்ல 
தொகுப்பெனத் தோன்றும் படித்துப்பாரும்;
தூண்டும் உங்களைத்தாண்டும்!

எழுத நினைத்தேன்;எழுதுகின்றேன்:
எழுதும் நிலையைத் தழுவுகின்றேன்;
தழுவும் நிலையில் நானிருக்கும்;ஒரு
தனிநிலை உணர்ந்தே எழுதுகின்றேன்!

எழுதுதல் எனக்குமிக இயல்பு:
எதையும் எழுதுதல் அதில்எளிது!
பழுதில்லாமல் வார்த்தைகளைப்
படைக்கும் ஆற்றல் தினம்புதிது!

பேனா,திறந்தால் பெருங்கடலின்
பேரலை போல்எழும் சிந்தனைகள்;
ஆனால் அவற்றை ஒரு நொடியில்
அடக்கிடத் துடிக்கும் கற்பனைகள்...

கண்ணை மூடிக் கண் திறந்தால்
கவிதைச் சந்தம் பல நூறு:
விண்ணில் இருந்து விழுகின்றன;
விரைந்து என்னுள் பலவாறு!

எதுகை,மோனை என்பதெல்லாம்
என்முன் தவமாய்த் தவமிருக்க
எதைநான் எடுத்துக் கையாள?
எனக்குள் பெரிய போராட்டம்!

விதையில் லாமல் முளைக் கின்றது;
வித்தில் லாமல் விளை கின்றது;
வதையில் லாமல் வதைக் கின்றது;
வரவேற் பின்றி நுழை கின்றது!'

சாதா ரணமாய்க் கடிதம்'எனச்
சற்றே எழுத நினைத் தாலும்
தோதாய் எதுகை,மோனை களைத்
துரத்தித் துரத்தித் தரு கின்றது!

உரைநடைவேகம் எங்கெங் கோ
உயரப் பறந்து கவி வானில்
வரைமுறை இன்றி உவமைகளை
வாரிக் கொண்டு பொழி கின்றது!

இயைபுத் தொடருள் என் கையோ
எனைக் கேட்காமல் நுழைகின்றது;
சுயமரி யாதை என்ப தெல்லாம்
சூக்கும அறிவாய் விரி கின்றது!

எழுத முனைந்ததும் இவ்வுலகம்
ஏனோ என்முன் மறைகின்றது;
முழுமனம் எங்கோ செல்கின்றது:
மூடருக் கெங்கிது புரிகின்றது?

எழுதும்போ தொரு ராஜ சபை
என்னுள் கூடி,என் எழுத்தைத்
தொழுது போற்றி வாழ்த்துவதை
தூர நின்றே ரசிக் கின்றேன்!

அடட,இதுதான் கவிதை நிலை;
அதற்குள் புகுவோர் அடையும்நிலை;
எடடா,ஏடு;எடுத் தெழுது!
என்னை ஜெயிப்பார் எவர் உண்டு?


இவண்-
கிருஷ்ணன்பாலா
 10.08.2010 / 07:30 pm