Wednesday, October 24, 2012

அறிவுச் செல்வம் அளித்த அன்னை




என்னைப் படைத் துலகை எந்நாளும் காத்துவரும்
அன்னைகலை வாணியவள்;அடிமலரைப் போற்றுகின்றேன்!

முன்னை வினை யாவும் முற்றாக அழித்தவளின்
பின்னை யான்தொடர்ந்து பெருமைகளைப் பூட்டுகின்றேன்!

‘ஏதிலான்போல்’ என்னை இருக்க வைத்திவ் வுலகில்
‘ஏது இலான்இவன்?’ என்று இராஜனையும் அஞ்ச வைத்தாள்!

கற்றோர் சபை நிறுத்தி கல்லாத என்உளத்தில்
மற்றோர் மயங்குகின்ற மாத்தமிழை மிஞ்ச வைத்தாள்!

பொற்றா மரைக்குளத்தில் புலவரெலாம் ஏங்குகின்ற
நற்றாள் சுவடி எலாம் நாடிவந்து எனக் கீன்றாள்!

அறிவென்னும் ஆயுதத்தை அடையாளம் காட்டி,அதில்
செறிவோடு சிந்திக்கும் சிந்தனைக்குள் எனை ஆண்டாள்!

‘பொன்னும் பொருளும்தினம் பொய்நின்ற வாழ்வோடு
மின்னும் சுகங்கள்’ என மேதைமையில் சிரிக்கின்றாள்!

‘திருமகளின் திருவடியும் தீரத்தின் மலைமகளும்
பெருமைக்கு உரிய தென’ப் பேசுவதை ரசிக்கின்றாள்!

மதியிழந்து போனபின்னர் மாளாத செல்வத்தின்
கதி என்ன ஆகும்? எனக் கண் சிமிட்டிக் கேட்கின்றாள்?

வீரமெனும் ஆற்றல்கள் விளைவிக்கும் பெருமை எலாம்
கூர்மைமிகும் புத்திமுன் குனிய வைத்துப் பார்க்கின்றாள்!

சிந்திக்கும் அறிவோடும் சீரான தெளிவோடும்
வந்திக்கும் விதியளித்து வாழ்வளித்தாள் என் அன்னை!

உண்மை,உயர் நோக்கம் ஒரு நாளும் தளராத
திண்மை மிகும் நெஞ்சம்தெளிவான தமிழ்த் தேடல்!

நேர்கொண்ட எழுத்துக்கள் நிஜமான கருத் துக்கள்;
‘யார் என்னை எதிர்த்தாலும் எதிர் நிற்க முடியாது!
பார்” என்று பறை சாற்றும் பைந்தமிழின் வல்லோனாய்
வார்த்தென்னை வைத்தாளை  வணங்கு கின்றேன்;இந்நாளில்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
22.10.2012

2 comments:

  1. அய்யா உங்கள் விரல் நுனியில் சரஸ்வதி தேவி குடி கொண்டிருக்கிறாள்
    அணைத்து பதிவுகளும் அருமை ,கவிதைகளில் தமிழ் தேவி நடன மாடுகிறாள்

    Regards

    R.SATHEESH MENON

    ReplyDelete
    Replies
    1. நுண்மை மிகு பார்வையோடு எனது பசைப்புக்குப் பட்டயம் அளித்க்த்கமைக்கு உளம் மகுழ்கின்றேன்.

      கிருஷ்ணன் பாலா
      27-11-2019

      Delete